Friday, January 22, 2010

* Neeingal Visheyshithavargal * - 22-01-2010 - Friday

22nd January 2010 - Friday

ஜனவரி மாதம் 22-ம் தேதி – வெள்ளி கிழமை


நீங்கள் விசேஷித்தவர்கள்

அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலினுடைய குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி யாதொருவன் இன்னும் மீதியாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.. ராஜ குமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான். - (2சாமுவேல் 3,11).

அநேக வருடங்களுக்கு பிறகு தன் மனைவி கர்ப்பவதியானது குறித்து ஒரு கம்பெனியில் வேலை செய்யும் ஒரு மனிதர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் தன் கூட வேலை செய்யும் சக ஊழியர்களிடம், 'என் மனைவி கர்ப்பம் தரித்திரிக்கிறாள். கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டார்' என்று சந்தோஷத்தோடு சொன்னபோது, ஒரு சிலர் 'தேவனிடம் பிள்ளையை கேட்டீரோ' என்று அவரை பரிகசித்தனர்.

பிள்ளை பிறந்தபோது, அந்த பிள்ளைக்கு Down Syndrome என்னும் பிறப்பிலேயே காணப்படும் குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தகப்பன், தன் விடுமுறை கழிந்து முதலாம் நாள் வேலையில் சேர்ந்துபோது, எப்படி தன் கூட வேலை செய்பவர்களை சந்திப்பது? கர்த்தரிடம் கேட்டு பெற்று கொண்ட பிள்ளையாயிற்றே, ஆனால் இப்படி குறையோடு பிற்நததை குறித்து கேலி செய்வார்களே என்று நினைத்தவராக, கர்த்தாவே எனக்கு அவர்களுக்கு பதில் சொல்ல நல்ல ஞானத்தை தாரும் என்று ஜெபித்தபடி தன் வேலையில் சேர்ந்தார். அவர் நினைத்தபடியே, ஒருவர் அவரிடம் வந்து, 'உனக்கு ஆண்டவர் இப்படிப்பட்ட பிள்ளையைதான் கொடுத்தாரா' என்று கிண்டலாக கேட்டார். அப்போது என்ன பதில் சொல்வது என்று திகைத்தவராக ஒரு சில நிமிடம் மௌனமாக ஜெபித்த அவர், பின் தைரியமாக, 'நல்லவேளை உனக்கு அப்படிப்பட்ட பிள்ளையை தேவன் கொடுக்காமல், எனக்கு கொடுத்ததற்காக தேவனை துதிக்கிறேன்' என்று கூறினார். இது உண்மையில் நடந்த சம்பவம்.

எப்படி அந்த மனிதர் குறையுள்ள அந்த பிள்ளையையும் தேவனிடமிருந்த பெற்ற ஈவு என்று எண்ணினாரோ அதைப்போல தாவீது இராஜாவும், இரண்டு காலும் முடமான சவுலின் பேரனாகிய மேவிபோசேத்துக்கு இரக்கம் காட்டுவதை பெரிதாக எண்ணினார். சிலர் மேவிபோசேத் முடமானவன்தானே என்று குறைவாக நினைத்திருக்கலாம். ஆனால், தாவீதோ அவரையும் ஒரு மனிதனாக, அவருடைய வாழ்க்கையையும் பெரிதாக மதித்தார்.

ஒருவேளை நம்முடைய சரீர உறுப்புகளிலும் சில குறைகள் இருக்கலாம். சிலர் நான் அழகாகவே இல்லையே என்று நினைக்கலாம், சிலர் நான் கறுப்பாக இருக்கிறேனே எனறு நினைக்கலாம், சிலர் எனக்கு இந்த குறை இருக்கிறதே என்று வருத்தப்படலாம். ஆனால் நாம் எல்லாருமே கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. 'நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன்' (ஏசாயா 43:4) என்று கர்த்தர் உங்களையும் என்னையும் பார்த்து கூறுகிறார். நாம் கர்த்தருடைய பார்வையில் அருமையானவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அவர் தம்முடைய சொந்த குமாரனை நமக்காக தந்தருளி அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை கழுவி விட்டபடியால் நாம் விசேஷித்தவர்கள். நாம் அருமையானவர்கள். நாம் கனம் பெற்றவர்கள். உலகத்தின் பார்வையில் நாம் கனவீனமுள்ளவர்களாக ஒருவேளை இருக்கலாம். ஆனால் கர்த்தரின் பார்வையில் நாம் மிகவும் விலையேறப்பெற்றவர்கள்.

மட்டுமல்ல, மோசே கர்த்தரை நோக்கி, நீர் எங்களை விலையேற பெற்றவர்கள் அல்லது விசேஷித்தவர்கள் என்று வைத்திருப்பது மற்ற ஜனங்களுக்கு எதினால் தெரியவரும்? 'எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்' என்றார் (யாத்திராகமம் 33:16-17). ஆம் நம் தேவன் நம்மோடு எப்போதும் இருப்பதினால், நாம் செல்லும் இடமெங்கும் (பாவ இடங்களுக்கு அல்ல, கர்த்தருடைய வேலையாக அல்லது நம் வேலையாக செல்லுமிடமெங்கும்) நம்மோடு கூட வருவதினால் நாம் எப்போதும் விசேஷித்தவர்களாக இருக்கிறோம். நம் தேவன் நம்மோடு இருப்பதினால் நம் மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கும்படியாக செய்கிறார். வேலையில் ஞானத்தை தந்தருளுகிறார். மற்றவர்களை பார்க்கிலும் ஞானத்திலும், சுறுசுறுப்பிலும், எல்லா முயற்சிகளிலும் வெற்றியை தருகிறார். கிறிஸ்தவர்கள் என்னும் கூட்டம் மிகச்சிறியதாக இருந்தாலும் அவர்கள் அன்புள்ளவர்கள், அவர்கள் கரிசனையுள்ளவர்கள், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்பது உலகத்திலுள்ள யாவருக்கும் தெரிந்திருக்கிறது. இதிலிருந்து நாம் விசேஷித்தவர்கள் என்பது விளங்குகிறதல்லவா?

நாம் மற்றவர்களை பார்க்கும்போதும் கர்த்தர் அந்த மனிதரையம் தம்முடைய சாயலில் உருவாக்கியிருக்கிறார் என்பதை நினைத்து மற்றவர்களை குறைவாக எண்ணக்கூடாது. தேவன் அவர்களை குறைவாக எண்ணாதபோது, நாம் மற்றவர்களை குறைவாக எண்ணுவது எப்படி? ஆகவே நாம் கர்த்தருடைய பார்வையில் விசேஷித்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்து அவரை எப்போதும் துதிக்ககடவோம். ஆமென் அல்லேலூயா!

தேவா நான் எதினால் விசேஷித்தவன்?
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் அது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
நீர் என்னோடு இருப்பதினால்

ஜெபம்: எங்களை விசேஷித்தவர்களாக மாற்றி உம்முடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்களாக மாற்றியிருக்கிற எங்கள் அருமை தகப்பனே, உம்மை துதிக்கிறோம். கிறிஸ்துவை ஏற்றுகொண்டு, அவரில் வாழ்கிற யாவரும் விசேஷித்தவர்களாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உலகத்தின் பார்வையில் நாங்கள் குறைவாக எண்ணப்பட்டாலும் உம்முடைய பார்வையில் விலையேறப்பபெற்றவர்களாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் குறைகளை நீர் எண்ணாதபடி எங்களோடு எப்போதும் இருக்கிறபடியினால், எப்போதும் கூட வருகிறபடியினால் உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment