Sunday, February 14, 2010

Aaiyathamaa? Aaiyathamaa? - 14-02-2010

14th February 2010 - Sunday

பிப்ரவரி மாதம் 14-ம் தேதி – ஞாயிற்று கிழமை

ஆயத்தமா? ஆயத்தமா?

அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். - (மத்தேயு 24:30).

இயேசுகிறிஸ்து சீக்கரம் வரப்போகிறார் என்பது நாம் யாவரும் அறிந்த விஷயமே. நம்முடைய பிதாக்களின் காலத்திலிருந்தே, 'மேகமீதில் இயேசுராஜன் வேகம் வாராரே' என்று பாடல்கள் பாடி அவருடைய வருகை சீக்கிரம் இருக்கும் என எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம். பவுல் அப்போஸ்தலன் தான் இருந்த காலத்திலேயே இயேசு வருவார் என்று நினைத்தார். அதனால்தான் 'பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெசலோனிக்கேயர் 4:17) என எழுதினார். ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் வருகை இன்றளவில் நடைபெறவில்லை. இந்த கட்டுரையில் அவருடைய வருகையை குறித்த சில காரியங்களை காண்போம்.

இயேசுகிறிஸ்து தாம் பரமேறி செல்வதற்கு முன் கொடுத்த வாக்குதத்தத்தின்படியேயும், அவரை குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாகவும் திரும்ப வரப்போகிறார். 'அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய வருகையைக் குறித்து வெளிப்படுத்தினார். வெளிப்படுத்தின விசேஷத்தில் 'பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது' (வெளி: 19:11-12) என்று அவருடைய இரண்டாம் வருகையை குறித்து எழுதியிருக்கிறதை காண்கிறோம்.

இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுந்து, பின்னர் பரமேறி சென்றதையும் சீஷர்கள் 'பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் (அப்போஸ்தல நடபடிகள் 1:9-11). அவர் எப்படி போனாரோ அந்தப்படியே அவர் மீண்டும் வருவார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை வெளியரங்கமான, மற்றும் அவர் இராஜாதி ராஜனாக, 1000 வருடம் இந்த உலகத்தை நீதியோடும், நியாயத்தோடும் ஆட்சி செய்யப்போகிறவராக வரப்போகிறார்.

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அவருடைய இரகசிய வருகையோடு இணைத்து தவறாக எடுக்க கூடாது. அவருடைய இரகசிய வருகையில் அவர் தம்முடையவர்களை இரகசியமாக வந்து, இந்த பூமியிலிருந்து எடுத்து கொண்டு செல்வார் (1 தெசலோனிக்கேயர் 4:16-17, 1கொரிந்தியர் 15:51-52).

இயேசுகிறிஸ்து எப்போது வரப்போகிறார் என்பது யாரும் அறியாத விஷயம். அநேகர் இயேசு இப்போது வருவார் என்று அவர்களாக கணித்து, ஒரு நாளை குறிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கணித்த ஒரு நாளிலும் அவர் வரவில்லை. சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற ஊழியர் இயேசுகிறிஸ்து இந்த மாதத்தில் வரப்போகிறார், அப்படி இல்லாவிட்டால், வேறொரு மாதத்தை குறித்து எழுதி, இந்த மாதம் கண்டிப்பாக வருவார் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் சொன்ன மாதமும் போய், அந்த வருடமும் முடிந்தது. ஆனால் இயேசுகிறிஸ்து வரவில்லை. வேதத்தில் சொல்லப்பட்டிராத காரியங்களை ஆராய்ந்து, தவறாக நாட்களை குறிப்பதினால் எந்த பயனும் இல்லை. அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் (மத்தேயு 24:36) என்று இயேசுகிறிஸ்துவே கூறியிருக்க, இவர்களாக ஒரு நாளை கணக்கிட்டு சொல்வது தவறானதாகும்.

இயேசுகிறிஸ்துவின் வருகைக்கான வாக்குதத்தங்களும், தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி வருகின்றன. ஆகையால் நம்முடைய கடமை நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தமாக்க படவேண்டும் என்பதே. 'உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்' (மத்தேயு 24:42-44) என்று இயேசுகிறிஸ்துவே கூறியிருக்கிறபடியால் நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தமாவோம். எப்படி ஆயத்தமாவது? மனம்திரும்பி, ஞானஸ்நானம் எடுத்து, இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று, கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்று, பரிசுத்த ஜீவியத்தை செய்து, அவருடைய வருகைக்கு காத்திருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

நீங்கள் அவருடைய வருகைக்கு ஆயத்தமா? ஆயிரமாயிரமான மக்கள் ஆயத்தம்! ஆயிரமாயிரமான மக்கள் ஆயத்தமாயில்லை! அவருடைய வருகை இன்றும் இருக்கலாம்! நாளையும் இருக்கலாம்! ஒரு வருடம் கழிந்தும் இருக்கலாம். நீங்கள் ஆயத்தமாக வேண்டியது முக்கியம்!

ஆயத்தமா?
ஆயத்தமா? ஆயத்தமா?
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா?
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா?
அவர் வருகையை எதிர்பார்க்கும் மாந்தர்க்கு
அவர் வருகை மாபெரும் மகிழ்ச்சி!
அவர் வருகை எதிர்பாராத மாந்தர்க்கு
அவர் வருகை மாபெரும் அதிர்ச்சி!

ஜெபம்: அன்பின் பரலோக தந்தையே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். இந்த நாளிலும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து தியானிக்க நீர் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் காணப்பட கிருபை செய்யும். அவருடைய வருகைக்கு நாங்கள் ஆயத்தமாக்கப்பட எங்களுக்கு கிருபை செய்யும். ஆயத்தமாயிராத மக்கள் கைவிடப்படுவார்களே, தகப்பனே, அந்திகிறிஸ்துவின் அந்த கொடிய காலத்திற்கு தப்பும்படியாக நீர் எங்களுக்கு இப்போது கொடுத்திருக்கும் கிருபையின் காலத்தில் இரட்சிக்கப்பட்டு உம்முடைய வருகைக்கு ஒவ்வொருவரும் ஆயத்தப்பட கிருபை செய்வீராக. நாங்கள் எதிர்பாராத நாழிகையிலே இயேசுகிறிஸ்து வர இருப்பதால், காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ள கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

Thursday, February 11, 2010

Wednesday – Ungaludaia Noekkam Enna? - 10-02-2010

10th February 2010 - Wednesday

பிப்ரவரி மாதம் 10-ம் தேதி – புதன் கிழமை


உங்களுடைய நோக்கம் என்ன?

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். - (யோவான் - 4:23)

நம்முடைய வாழ்க்கைப் பாதையிலே அநேகரை சந்திக்கிறோம். அதில் சிலர் நம்மிடம் ஏதாவது கிடைக்குமென்று புன்முறுவலோடு பேசுவர். சிலர் நமக்கு தீங்கு செய்யும் நோக்கத்தில் அன்பாய் பழகுவது போல நடிப்பர். ஆனால் ஒரு சிலர் எந்த ஒரு இரண்டாம் நோக்கமுமின்றி உண்மையாய் சிநேகிப்பர். இப்படி மனித உறவுகளின் நோக்கத்திலுள்ள வித்தியாசத்தைக் காண்கிறோம். இதேப் போல கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொண்டிருப்போரும் பல காரணங்களுக்காக இயேசுவைத் தேடுகின்றனர். அதில் சில காரணங்கள் உண்மையான நோக்கமுடையவையல்ல. ஆனால் சில நோக்கங்கள் சிறந்தது. 'ஆன்மீக வாழ்க்கைத் தியானங்கள்' என்ற புத்தகத்தில் சாது சுந்தர் சிங் மூன்று வகையான கிறிஸ்தவர்களைக் குறித்து எழுதுகிறார். அவற்றை இன்று தியானிப்போம்.

ஞானி ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது வழியிலே மூன்று வகையான நபர்களை சந்திக்கிறார்.

அவர் சந்தித்த முதலாம் நபர் மிகவும் சோர்ந்து போனபவராய் பயத்தில் நடுங்கிக் கொண்டு காணப்பட்டார். அவர் அந்த கிறிஸ்தவரிடம் நீ ஏன் இப்படி காணப்படுகிறார் என்று வினவினார். அவன் 'நான் ஒருவேளை நரகத்திற்கு சென்றுவிடுவேனோ என்ற பயம் என்னை ஓயாமல் வாட்டுகிறது.' என்றார். அதற்கு ஞானி, 'தேவ பயத்திற்கு பதிலாக பிசாசுக்கென்று ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள நரகத்திற்கு பயப்படுகிறாயே உன் நிலை எவ்வளவு பரிதாபமானது நீ கர்த்தரை தேடுவது உண்மையானதல்ல நரகத்திற்கு தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஏதுவாகவே பார்க்கிறாய்' என்றார்.

இரண்டாவது கிறிஸ்தவனை சந்தித்தார். அவனும் வருத்தத்துடன் காணப்பட்டான். ஞானி காரணம் கேட்டதற்கு, 'மோட்சானந்தமும், இளைப்பாறுதலும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்' என்றான். அதற்கு ஞானி, 'படைத்தவரின் ஆச்சரியத்தையும், அன்பையும் எண்ணாமல், மோட்சத்தை அடைய வேண்டுமென்று மட்டும் நீ தேவனை வணங்குவது வெட்கப்படத்தக்கது' என்றார்.

பின்பு மிகவும் திருப்தியும், மகிழ்ச்சியும் நிறைந்த மூன்றாவது கிறிஸ்தவனைக் கண்டார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று அவனிடம் வினவியபோது, 'என் இரட்சிப்பின் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறேன். அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அவர் என்மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி எண்ணி வியந்து பூரிக்கிறேன். அதனால் என் இருதயம் எப்போதும் அவர் அன்பினாலும், பிரசன்னத்தினாலும் நிரம்பி என்னை ஆனந்த கிறிஸ்தவனாக மாற்றிற்று' என்றான்.

என்ன அருமையான் விளக்கம் பார்த்தீர்களா? அன்பானவர்களே! நீங்கள் இயேசு கிறிஸ்துவை எந்த நோக்கத்திற்காக தொழுது கொள்கிறீர்கள்? அவரை நேசித்தா? அல்லது அவர் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்காகவா? அல்லது நரகத்திற்கு பயந்து கர்த்தரை தேடுகிறீர்களா? நீங்கள் கர்த்தரை உண்மையான இருதயத்தோடு நேசித்து அவரை தொழுது கொள்ளுங்கள். அப்போது அவர் உங்களை ஆசீர்வதித்து, நரகாக்கினைக்குத் தப்புவித்து, தாமிருக்கும் மகிமையான பொன்னகரத்திற்கு நேராய் உங்களை பத்திரமாய் நடத்துவார். ஆமென் அல்லேலூயா!

இயேசுகிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசுகிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளில் நீர் எங்கள் மேல் பாராட்டின உமது கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் என்றென்றும் உம்மை எங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்கவும் உண்மையான இருதயத்தோடு தொழுதுக்கொள்ள கிருபை செய்யும். உமக்கே சகல துதி கனம் மகிமை உண்டாகுவதாக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

Tuesday – Virundhirku Azhaikkapattavargal - 09-02-2010

09th February 2010 - Tuesday


பிப்ரவரி மாதம் 9-ம் தேதி – செவ்வாய் கிழமை

விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள்

அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். - (லூக்கா 14:23-24).

நீங்கள் ஒரு விருந்து வைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறீர்கள். அவர்கள் வருவார்களென்று அந்த நகரத்திலேயே சிறந்த ஹோட்டலில் உணவு வகைகளையும், சாப்பிட்டபின் பரிமாறுவதற்கென்று இனிப்பு வகைகளையும் உங்கள் நண்பர்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டி பலவித வேடிக்கை விளையாட்டுகளையும் ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் நேரம் வந்தபோது, யாரும் வரவில்லை. ஒருவரும் தங்கள் தலையை கூட காட்டவில்லை என்று வைத்து கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? முதலாவது நீங்கள் அனுப்பிய கார்டில் சரியான நேரம் நாளும் எழுதியிருக்கிறதா என்ற பார்ப்பீர்கள். பின் ஒவ்வொருவரையம் போனில் அழைக்க ஆரம்பிப்பீர்கள். ஒருவர், 'நான் இப்போதுதான் ஒரு நிலம் வாங்கினேன். அதை பார்க்க போய் கொண்டிருக்கிறேன்' என்று சொல்கிறார், மற்றவர், 'இப்போதுதான், நான் ஒரு புதிய காரை வாங்கினேன், அதை ஓட்டி பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றும், மற்றவர் 'நான் இப்போதூன் திருமணம் செய்தேன், என் மனைவி என்னை விடமாட்டேன் என்கிறாள்' என்று உங்கள் அழைப்பை அசட்டை செய்து ஏதாவது சாக்குபோக்கு சொன்னால் என்ன செய்வீர்கள்?

முதலில் உங்களுக்கு கோபம் வரும். அழைத்தவர்களுக்கு அந்த நேரம்தான் கார்ட் போகவில்லை. குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பே சென்றிருக்கவேண்டும். அவர்கள் அதற்கேற்றபடி தங்கள் நேரத்தை ஒழுங்கு செய்து வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ, வர விருப்பமில்லாதவர்களாக ஏதோ காரணத்தை சொல்லி வர மறுத்தபடியால், அங்கு அவர்களுக்கு என்று உணவு கொடுக்க ஆயத்தமாயிருந்த வெயிட்டர்களையும், வேலையாட்களையும் தெருவிற்கு அனுப்பி, 'கண்ணில் தென்படுகிற அனைவரையும் அழைத்து கொண்டு வாருங்கள், அவர்கள் ஊனர்களாக, தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் வந்து நான் செய்த விருந்தை சந்தோஷமாய் அனுபவிக்கட்டும்' என்று அனுப்புவீர்களல்லவா?

லூக்கா 14:16-24-ல் காணப்படும் உவமையில் அந்த காரியம் தான் காணப்படுகிறது. தேவன் தம்முடைய எல்லையற்ற அன்பினால் நம் அனைவரையும் கிறிஸ்துவின் மூலம் தமது விருந்திற்கு அழைக்கிறார். ஆனால் நாமோ, ஏதோ காரணம் காட்டி அந்த விருந்திற்கு வர மறுக்கிறோம். அது வேறு மதத்தை சார்ந்திருப்பதால் இருக்கலாம், அல்லது வேறு பல காரணங்களாய் இருக்கலாம், ஆனால் தேவாதிதேவன் கொடுக்கிற விருந்திற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் விருந்திற்கு வராததற்கு முக்கிய காரணங்களாக மூன்று காரணங்கள் இந்த உவமையில் காணப்படுகிறது:

1. செல்வம்: வாங்குகிறதிலும் விற்கிறதிலும் சிலர் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு தேவனுடைய காரியங்களை குறித்து சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. 'உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்' என்று இயேசுகிறஸ்து சொல்வார்.

2. வேலை: சிலர் வேலையையே திருமணம் செய்திருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் வேலை வேலை. விடுமுறையிலும் போய் வேலை செய்யும் ஆட்கள் உண்டு. எப்படியாவது வாழ்வில் முன்னேறுவதுதான் அவர்கள் குறிக்கோள். தேவனை குறித்து சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

3. மனைவி: மனைவியின் விருப்பதிற்கு ஏற்ப நடந்து, உலக வாழ்க்கையை இஷ்டம் போல அனுபவித்து, பரத்திற்குரிய காரியங்களில் அக்கறை காட்டுவதில்லை.

நீங்கள் சொல்லும் சாக்குபோக்கு என்ன? தேவன் தகுதியல்லாத நம்மை நித்திய நித்தியமாய் அவரோடு கூட விருந்துண்ணும்படி அழைத்திருக்கிறார். அதற்கு நாம் வராதபட்சத்தில் தேவனும் : 'நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்று சொல்லுவார்.

அவருடைய அழைப்பை குறித்து அக்கறையின்றி உலகத்தின் ஆசாபாசங்களில் நாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறோமா? அந்த விருந்தில் தகுதியில்லாத நாம் பங்கு பெறும்படி இயேசுகிறிஸ்து ஏற்கனவே கிரயத்தை செலுத்தி விட்டார். உங்களுக்கென்று ஒரு இடம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கு பெறுவதும் நிராகரிப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர், அதிலும் உண்மையுள்ளவர்கள் வெகுசிலரே! அந்த உண்மையுள்ளவர்களின் பட்டியலில் நாமும் சேர்ந்து கர்த்தரோடு யுகாயுகமாய் விருந்துண்ண எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல், அவருடைய அழைப்பை ஏற்று அவருக்கு பின் செல்வோமாக!


இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர்
அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர்
கலியாண சாலை நிரப்புவார்!
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்

ஜெபம்: எங்களை அன்புடன் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கல்யாண விருந்திற்கு அழைக்கப்பட்ட அநேகர், அநேக சாக்குகளை சொல்லி வராமல் இருந்த போது, தகுதியில்லாத எங்களை உம்முடைய கல்யாண விருந்திற்கு அழைத்தீரே உமக்கு ஸ்தோத்திரம். இந்த உலகத்தின் காரியங்கள் எங்களை எப்போதும் இழுத்து கொண்டிருக்கும் தருணத்தில் தேவன் அழைக்கும் அழைப்பை உணர்ந்து விருந்து சாலைக்கு நாங்கள் வந்து விட எங்களுக்கு கிருபை செய்வீராக. வெகு சிலராய் இருக்கும் உண்மையுள்ளவர்களின் பட்டியலில் நாங்களும் காணப்பட தேவன் எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

Sunday – Martravargalai Kaanum Vidham - 07-02-2010

7th February 2010 - Sunday

பிபரவரி மாதம் 7-ம் தேதி – ஞாயிற்று கிழமை

மற்றவர்களை காணும் விதம்

இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். - (மத்தேயு 7:4-5).

ஒரு வயதான பெண்மணி, தன்னுடைய பல்லின் வேதனைக்காக ஒரு பல் டாக்டரிடம் சென்றிருந்தார்கள். அவர்கள் முதல் தடவையாக அந்த வைத்தியரிடம் சென்றிருந்தார்கள். காத்;திருக்கும் அறையில் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருந்தார்கள். அப்போது அங்கு ஒரு பலகையில் அந்த டாக்டரின் பெயரும் அவருடைய பட்டங்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த வயதான பெண்மணி அமர்ந்திருக்கும்போது, அவர்களுக்கு அந்த பெயரில், ஒரு அழகிய உயரமான வாலிபன் 40 வருடங்களுக்கு முன் தன்னோடு படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை அந்த மாணவனாய் இருக்குமோ என்று அவர்கள் யோசித்து கொண்டே இருக்கும்போது, அவர்களை அழைக்கும் சத்தம் கேட்டது.

உள்ளே சென்ற அந்த மாணவன்தானா என்று பார்த்தபோது, நிச்சயமாய் அந்த மாணவனாக இருக்க முடியாது என்று தீர்மானித்தார்கள். ஏனெனில் அந்த வைத்தியர், மிகவும் வயதானவராக, முடியெல்லாம் கொட்டி, பாதி மொட்டையாக இருந்ததை பார்த்து, ஒருபோதும் இந்த வயதான மனிதர் என்னோடு படித்தவராக இருக்க முடியாது என்று நினைத்தவர்களாக, தான் படித்த பள்ளியின் பெயரை சொல்லி, 'இந்த பள்ளிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், 'ஆம் ஆம் நான் அங்கு தான் படித்தேன்' என்று கூறினார். எந்த வருடம் எனறு கேட்டதற்கு அவர் வருஷத்தை சொன்னார். அப்போது அந்த வயதான பெண், சந்தோஷத்தோடு, 'நீர் என்னுடைய வகுப்பில்தான் இருந்தீர்' என்று கூறினார்கள். அதற்கு அந்த வைத்தியர், 'அப்படியா? நீங்கள் எந்த பாடத்தை சொல்லி கொடுத்தீர்கள்' என்று கேட்டார்.

அநேக முறை நாம் நம் வயதில் இருக்கும் மற்றவரை பார்த்து, எனக்கு இன்னும் அந்த அளவு வயதாகி விடவில்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது நாம் நினைக்கிற மாதிரிதான் அவர்களும் நினைக்கிறார்கள் என்பதை மறந்து போகிறோம். சில குண்டு பேர்வழிகளை பார்க்கும்போது, ஆஹா நாம் அந்த அளவு குண்டாக இல்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது, அப்பா, இந்த அம்மா எவ்வளவு குண்டு என்று நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிவதில்லை. நம்முடைய சரீர அளவு நமக்கு தெரிவதில்லை.

அதுப்போல நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும், சிலருடைய வாழ்க்கையை பார்த்து நாம் நல்ல வேளை அந்த அளவு பாவம் செய்யவில்லை என்று நினைத்து கொள்கிறோம். அதுப்போல அவர்களும் தங்கள் வாழ்வில் உள்ள பாவங்களை பார்க்காதபடி, நாம் காண்கிற வண்ணமே காண்கிறார்கள் என்பதை நாம் மறந்து போகிறோம்.

அதைத்தான் இயேசுகிறிஸ்துவும் 'இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்' என்று கூறினார். மற்றவர்கள் செய்கிற தவறுகள் நமக்கு பெரிய காரியமாகவும், அது எப்படி அவர்கள் செய்யலாம், கடவுள் பயம் இல்லை? எனறு சொல்கிற நாம் அதையே நாம் செய்ய நேரிடும்போது அது நம்முடைய பெலவீனம் என்று சொல்வது நிச்சயமாக மாய்மாலமான காரியமாகும்.

இன்று நம்முடைய உருவத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, உண்மையில் நாம் இருக்கும்வண்ணமாகவே ஒத்துக்கொள்வோம். அதுப்போல வேத வசனமாகிய கண்ணாடியில் நம் வாழ்க்கையில் காணப்படும் குற்றங்களை ஒத்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை இருக்கிற வண்ணமாகவே கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். முதலாவது நாம் நம்மை காண்ணாடியில் பார்க்கிற மாதிரி மற்றவர்களையும் பார்ப்போம். அப்படி இல்லாதபடி, மற்றவர்களை பூதக்கண்ணாடியிலும் நம்மை சாதாரண கண்ணாடியிலும் பார்க்கும்போது, அநேக வித்தியாசங்கள் தோன்ற தான் செய்யும். எப்போது நம்மை பார்க்கிற மாதிரி மற்றவர்களை பார்க்கிறோமோ அப்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்விலும் உயருவோம், முன்னேறுவோம்.

முதலாவது நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டுவிட்டு, பின்பு நம் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்க்கும்படியாய் கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

உம்மை போலாக்கும் இயேசுவே
உம்மை போலாக்கும்
உள்ளத்தை அன்பால் நிரப்பி
என்னை உம்மை போலாக்கும்

ஜெபம்: எங்களை அன்புடன் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் எங்களை காண்கிற வண்ணமாகவே மற்றவர்களையும் காண உதவி செய்யும். மாய்மாலமான ஜீவியம் செய்யாதபடி, உண்மையாய் நாங்கள் இருக்கிற வண்ணமாக எங்களை உமக்கு அர்ப்பணிக்க கிருபை செய்யும். எங்களில் காண்ப்படுகிற குறைகளை எடுத்து போடவும், மற்றவர்கள் குறைகளை பெரிதாய் காணாதபடிக்கும் எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

Friday - Ummudiya Sitham - 05-02-2010

5th February 2010 - Friday

பிபரவரி மாதம் 5-ம் தேதி – வெள்ளி கிழமை

உம்முடைய சித்தம்

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் - (யோவான் - 14:13).

ஐந்து வயது நிரம்பிய சிம்சோன், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை கடைக்குச் சென்று தனக்கு பிடித்த விளையாட்டுச் சாமான் வாங்கச் சென்றான். அங்கு அநேக பொம்மைகளும் விளையாட்டுச் சாமானங்களும் நிரம்பி இருந்தன. அதில் அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன் விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன் அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறி விட்டு பின்பு வீடு திரும்பினார்கள்.

அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன் விரும்பிய அதே கார் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் 'அட மடையா! இந்த காருக்கே நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே, அம்மா உனக்கு இதைவிட பெரிதான ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி கொடுக்க இருந்தார்கள். ஆனால் நீ இதை வாங்க வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்' என்றான். அதைக் கேட்டபோது சிம்சோனின் இருதயம் கனத்தது.

இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச் சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும். நாம் ஜெபிக்கும்போது 'உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்' ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.

நம் தேவனுக்கு கொடுக்க முடியாத பெரிய தேவை என்று ஒன்றுமில்லை. ஆகையால் பெரிய காரியங்களுக்காக ஜெபிப்போம் பெரிய பதிலை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா!


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல்
நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே... ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை பெற்றுக் கொள்ள எங்களை எழுப்பி ஏவும். எங்களது தேவைகளுக்காக மட்டுமல்ல, எங்களது தேசத்திற்காக பெரிய காரியங்களை செய்ய, பெற்றுக் கொள்ள உதவும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

Irandu Manam Veyndaam - 04- 02-2010 - Thursday

04th February 2010 - Thursday


பிப்ரவரி மாதம் 4-ம் தேதி – வியாழன் கிழமை

இரண்டு மனம் வேண்டாம்

'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது' - (மத்தேயு - 6:24).

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற பாடகர் லூசியானோ பவரோட்டி (Luciano Pavarotti) ஒரு முறை சொன்னார், அவருடைய சிறுவயதில் அவருடைய தந்தை ரொட்டி செய்பவராக இருந்தார். அவர் பவரோட்டியை பாடுவதற்கு ஊக்கமளித்தார். நன்கு பாடுவதற்கு 'பாடி பாடி குரல் வளத்தை பெருக்க வேண்டும்' என்று அவருடைய தந்தை அவருக்கு அறிவுறுத்தி வந்தார். பின்னர், Arrigo Pola என்பவரின் கீழ் இருந்து முறையாக பாட்டுபாட கற்று கொண்ட பவரோட்டி, தன் தகப்பனிடம் வந்து, 'நான் பாடல் கற்று கொடுக்கும் ஆசிரியராக வேண்டுமா? அல்லது பாடகனாகவே இருக்க வேண்டுமா' என்று கேட்டார். அப்போது அவருடைய தந்தை, 'நீ இரண்டு நாற்காலிகளில் அமர வேண்டும் என்று விரும்பினால், நீ அவைகனின் நடுவே விழுந்து போவாய், உன் வாழ்க்கையில் வளம் பெற வேண்டுமானால், ஒரே ஒரு நாற்காலியில் அமர பார்' என்று அறிவுரை கூறினார்.

'பின், அவருடைய அறிவுரையின்படியே நான் ஏழு வருடங்கள் படித்து, முதன் முதலாக வெளிப்படையாக பாட ஆரம்பித்தேன். அதன்பின் ஆபரா பாடல்களில் பாடுவதற்கு இன்னொரு ஏழு வருடங்கள் ஆனது, ஆனால் என் தந்தையின் அறிவுரையின்படி நான், ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் என் கவனத்தை செலுத்தினதினால், நான் தேர்ச்சி பெற்ற பாடகனாக மாறினேன். புத்தகம் எழுதுவதானாலும், எதை செய்வதானாலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும். எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு, அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, முதலிடம் பெற வேண்டும்' என்று கூறினார்.

பவரோட்டி கூறியது உலக காரியத்திற்காக என்றாலும், ஆவிக்குரிய காரியத்திற்கும் அது பொருந்தும். நாம் உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு நாற்காலிகளிலும் உட்கார முயன்றால், இரண்டுக்கும் நடுவில் விழுந்து போவோம்.

'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது' என்ற இயேசுகிறிஸ்து கூறினார்.

நம்மில் அநேகர், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஆலயத்திற்கு சென்று வந்துவிட்டு, பின்னர் வருகிற வழியிலேயே கரி இறைச்சி வாங்கி வந்து, சமைத்து சாப்பிட்டு விட்டு, சாயங்காலத்தில் டிவி முன்னால் உட்காருவதுதான், எல்லா நிகழ்ச்சியும் முடிந்த பிறகே எழுவது, பின் ஜெபமாவது ஒன்றாவது, படுத்து தூங்கி, அடுத்து நாளிலிருந்து, வேலைக்கும் வீட்டுக்கும் ஒரே ஓட்டம்தான்! இதில் கர்த்தருக்கு எங்கே நேரம்? யாராவது ஊழியக்காரர் என்ன ஐயா ஜெபிக்கிறீர்களா? என்று கேட்டால் எங்கே ஐயா, ஒரே பிஸி என்று சொல்வார்கள். ஆலயத்திற்கு சென்று காணிக்கை போட்டுவிட்டு வந்தால் ஏதோ பெரிய காரியத்தை செய்து விட்டு வந்ததை போன்ற நினைப்பு! 'பூமியும் அதின் நிறைவும் என்னுடையது' என்ற கர்த்தருக்கு நீங்கள் போடும் காணிக்கை எந்த வகையில் திருப்திபடுத்தும்? நீங்கள் உங்களையே காணிக்கையாய் தருவதையே கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார். தேவனுக்கும் உலக பொருளுக்கும், உலகத்திற்கும் ஒரு நாளும் ஒரே நேரத்தில் நாம் ஊழியம் செய்ய முடியாது.

நாம் படித்திருக்கும் ஜியாமெட்ரியில் (Geometry) இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஒரே ஒரு கோடு மாத்திரம் தான் வரைய முடியும். ஒரு புள்ளியிலிருந்து அநேக கோடுகளை ஆரம்பிக்கலாம். ஆனால் அது முடியும்போது அது வேறு இடத்தில்தான் முடியும். ஆகவே, நமக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது நமக்கும் உலகத்திற்கும் இடையில் ஒரே ஒரு கோடு மாதிரி உறவுதான் இருக்க முடியும். இரண்டுக்கும் இடையில் இருந்தால் விழுந்து போவோம். இந்த கடைசி நாட்களில் தேவனுக்காக காரியங்களை சாதிக்க வேண்டிய நாம் இப்படி இரண்டு பக்கத்திலும் இருந்தால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமுமில்லை. அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருந்தால் வாந்தி பண்ணிபோடுவேன் என்று கர்த்தர் எச்சரிக்கிறார். கர்த்தர் நம்மை வேண்டாம் என்று சொல்வாரானால், நமக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போகும்.

யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, 'கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்' - (யோசுவா 24:15). இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய சொந்த ஜனம் தான். ஆனாலும் அவர்கள் வழிவிலகி வேறே தேவர்களை சேவித்தார்கள். அப்போது தேவனுக்காக யோசுவா வைராக்கியமாய் எழுந்து இந்த வார்ததைகளை அந்த ஜனத்திற்கு சொன்னார். அதுப்போல நாமும் இந்த நாட்களில் கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம். ஆமென் அல்லேலூயா!

கர்த்தரை மாத்திரம் சார்ந்து ஜீவிப்போம். உலகமும் அதன் எல்லாமும் ஒரு நாள் அழிந்து போகும். அழிந்து போகின்ற ஒன்றை நாம் சார்ந்து வாழாதபடி அழியாத தேவனை நாம் சார்ந்து கொள்வோம். கர்த்தருக்காக சாதிப்போம். நம் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும்.

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் செல்வேன் உம்மையல்லால்
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா
மனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல வேளைக்காக நன்றி செலுத்துகிறோம். நீர் அன்றி வாழ்வேது நாதா? இந்த உலகத்தின் காரியங்கள் சீக்கிரமாய் கடந்து போகும் தகப்பனே, நீரே எங்களுக்கு வேண்டும் ஐயா. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் என்று சொன்னீரே, இருமனமுள்ளவர்களாய் அல்ல, ஒரே மனமாய் உம்மை மாத்திரம் பின்பற்ற எங்களுக்கு கிருபை செய்யும். யோசுவாவைப்போல கர்த்தரையே சேவிப்போம் என்று உம்மையே பின்பற்ற கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

Tuesday, February 2, 2010

Kaalamoe Seludhey - 02- 02-2010 – Tuesday

2nd February 2010 - Tuesday

பிபரவரி மாதம் 2-ம் தேதி – செவ்வாய் கிழமை

காலமோ செல்லுதே

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். - (எபேசியர் - 5: 15,16)

1887-ம் வருடம் இம்மானுவேல் நெஞ்சர் (Immanuel Nenjer) என்பவர் தன் பணியாளிடம் 20 டாலரை கொடுத்து, காய்கறி வாங்கி வர சொன்னார். அந்த பணியாள் அப்படியே போய் வாங்கிவிட்டு, அந்த 20 டாலர் பணத்தை, கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்த போது, அதை வாங்கிய பெண்ணின் கைகளில் அந்த பணத்திலிருந்து மை (Ink) கைகளில் பட்டது. உடனே அந்த பெண்ணிற்கு தோன்றிற்று, இந்த ஆள் கள்ளநோட்டு அடிக்கிறாரா என்று. ஆனால் அந்த பெண்ணிற்கு இம்மானுவேலை வெகு நாட்களாக தெரியும், ஆகவே மிச்ச காசை கொடுத்து விட்டு, திரும்ப அந்த நோட்டை பார்த்தபோது, அதிலிருந்த மை கரைந்தது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு சொல்லி, அவர்கள் இம்மானுவேலின் வீட்டை பரிசோதித்தபோது, வீட்டின் மேல் அட்டிகையில், அவர் கள்ள நோட்டு உருவாக்குவது தெரிய வந்தது. அந்த மனிதர் ஒரு அற்புதமான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் 16,000 டாலருக்குமேல் விற்பனை ஆனது. அப்படியிருக்கும்போது, அவர் இந்த 20 ரூபாய் நோட்டை கள்ள நோட்டாக வரைந்து விற்றது எத்தனை முட்டாள்தனம்! இதில் என்ன ஒரு காரியம் என்றால், அவர் 20 டாலர் நோட்டை வரைவதற்கும், அந்த 16,000 டாலர் படத்தை வரைவதற்கும் எடுத்து கொள்ளும் நேரம் ஒன்றுதான்.

ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு பதில் அவர் கள்ளநோட்டை வரைந்து, தன்நேரத்தை வீணடித்தது எத்தனை முட்டாள்தனம்! எத்தனை ஞானமற்ற செயல்!

நாமும் கூட அநேக வேளைகளில் அப்படிதான் இருக்கிறோம். கடந்த நாளில் நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவழித்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். எத்தனை முறை தேவையில்லாத காரியத்திற்காக நம் நேரத்தை வீணாக செலவழித்திருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயமாக நாம் எல்லாரும் குற்றவாளிகளாக தான் இருப்போம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் 1,440 நிமிடங்கள் கர்த்தர் கிருபையாக கொடுத்திருக்கிறார். ஒருவருக்கும் கூடுதலும் இல்லை, குறைச்சலும் இல்லை. இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் மன்னா கொடுக்கப்பட்டபோது, அதை அடுத்த நாளுக்காக எப்படி வைக்கமுடியாதோ, அதைப் போல நாமும் இந்த நாளிலிருந்து கொஞ்ச நேரத்தை எடுத்து, அடுத்த நாளுக்காக வைக்க முடியாது. அன்றன்று கொடுக்கிற நேரத்தை அன்றன்றே நாம் செலவு செய்ய வேண்டும். ஆனால் அதை எப்படி செலவு செய்கிறோம் என்பது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.

போன நேரத்தை நாம் திரும்ப பெற முடியுமா? ஆகையால் நமக்கு கொடுக்கப்பட்ட அருமையான நேரத்தை ஞானமாக மகிழ்ச்சியாக வெற்றியாக செலவழிப்போம். உங்களுக்கு தெரியுமா?

ஒரு வருடத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு வருடம் பள்ளியில் தோல்வியுற்ற மாணவனிடம் கேட்க வேண்டும்.

ஒரு மாதத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே பிள்ளையை பெற்றெடுத்த தாயிடம் கேட்க வேண்டும்.

ஒரு வாரத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.

ஒரு நிமிடத்தின் அருமையை அறிந்து கொள்ள தனது வேலை நேர ரயிலை தவறவிட்ட மனிதனிடம் கேட்க வேண்டும்.

ஒரு நொடியின் அருமையை அறிந்து கொள்ள தனது காரின் பெரிய விபத்தை தவிர்த்த மனிதனிடம் கேட்க வேண்டும்.

ஒரு வாழ்நாளின் அருமையை அறிந்து கொள்ள மறுமையில் வெறுங்கையாய் தேவனிடம் கணக்கு ஒப்புக் கொடுக்கும்போது அறிந்து கொள்வோம்.

ஒருவருக்காகவும் நேரம் காத்திருப்பதில்லை. ஆகையால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக செலவழிப்போம். ஆத்துமாக்களை கர்த்தரிடம் சேர்ப்போம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திராமல் சோம்பலாய்
காலங்கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங் கையனாக உம்மை
கண்டு கொள்ளல் ஆகுமா?

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் நீர் எங்களுக்கு கிருபையாய் கொடுக்கும் நேரத்தை வீணாக செலவழிக்காதபடி பயனுள்ளதாய் செலவழிக்க கிருபை தாரும். நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு தருவீராக. ஒவ்வொரு நாளும் மிகவும் விலையேறபெற்றதென்பதை நாங்கள் உணர்ந்து, எங்களால் இயன்ற வரை ஆத்துமாக்களை உம்மிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com